×

வாரிசு அரசியல் என அனைத்து கட்சியினர் மீதும் குற்றம்சாட்டியவர்; நாம் தமிழர் பொதுக்குழுவில் மனைவிக்கு திடீர் முக்கியத்துவம் கொடுத்த சீமான்: கட்சி பொதுச் செயலாளர் ஆக்க திட்டமா?


சென்னை: வாரிசு அரசியல் என அனைத்து கட்சியினர் மீதும் குற்றச்சாட்டு தெரிவித்த சீமான், நேற்று நடைபெற்ற கட்சி பொதுக்குழுவில் மனைவி கயல்விழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், அவரை வாரிசாக்க திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர். அவரை கட்சி பொதுச் செயலாளராக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், வாரிசு அரசியல் குறித்து பேசும்போது, அனைத்து அரசியல் கட்சியினரையும் தனிப்பட்ட முறையில் திட்டி தீர்த்திருப்பார். தமிழகம் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் பாஜ, காங்கிரஸ் என யாரையும் விட்டு வைக்கவில்லை. அனைவரையும் தனிப்பட்ட முறையில் வாரிசு அரசியல் என திட்டியே பேசி வந்தார்.

குறிப்பாக பிரதமர் மோடியையும் இந்த விஷயத்தில் விட்டு வைக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தேனி தொகுதிக்கு பிரதமர் மோடி வந்தார். அப்போது, ‘வாரிசு அரசியலை ஒழிப்போம் என கூறும் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க தேனிக்கு வந்ததே ஒரு வாரிசுக்குத் தான் என்பதை மறந்துவிட்டார் போலும்’ என அவரையும் விமர்சித்தார். இது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக, சீமான் தனது மைத்துனருக்கு நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கியதை சுட்டிக்காட்டி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அந்த பத்திரிகையாளரை பைத்தியம் என கடுமையாக விமர்சித்தார். இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அடுத்ததாக, அதிமுகவை விமர்சித்த போது, எம்.ஜி.ஆருக்கு நினைவுச்சின்னம் தொப்பியும், கண்ணாடியும் என்றும் அண்ணாவின் நினைவு சின்னம் மூக்குப்பொடி டப்பா என்றும், ஜெயலலிதாவின் நினைவு சின்னம் ‘மேக்கப் செட்’ என்றும் அதிமுகவினரை சீண்டினார். சீமானின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சீமான் தனது வாய்க்கொழுப்பை அதிமுகவிடம் காட்டினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார். இப்படி சீமான், எப்போதெல்லாம் நரம்பு புடைக்க பேசுகிறாரோ அப்போதெல்லாம் சர்ச்சையில் சிக்கி வருகிறார். ‘நான் ஒரு பிச்சக்கார பய.. என்னால மத்தவங்க மாதிரி தேர்தல்ல செலவழிக்க முடியாது’ என்று அவர் பேசினார். ஆனால், ஈசிஆர் பங்களாவில் காக்காவிற்கு நெய் சோறு வைக்கும் அளவிற்கு அவர் ஏழை என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

அதேபோன்று அவர் 5 நட்சத்திர விடுதியான ரேடிசன் புளுவில் தான் தங்குவார் எனவும் அரசியல் விமர்சகர்கள் பொளந்து கட்டினர். மேலும், ரூ40 ஆயிரம் மதிப்புள்ள டீஷர்ட்டை சீமான் போட்டதும் பேசும் பொருளானது. இந்த சூழலில் கடந்த ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், ‘‘போர் என்றால் முதலில் வருபவர்கள் தான் முதலியார்கள்’’ என அவர் பேசியதும் விமர்சனத்திற்குள்ளானது. அதேபோன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது, அருந்ததியர் விஜய நகர பேரரசின் ஆட்சி காலத்தில் வந்த வந்தேறிகள், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக அழைத்து வரப்பட்டனர் என சீமான் கூறியது பல போரட்டங்களுக்கு வழிவகுத்தது. இப்படி தனது விதாண்டாவாத பேச்சால் அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.

ஏதாவது ஒரு விமர்சனத்தை முன் வைத்து பேசிவிட்டு, அதன் பின்பு தனக்கு எதுவும் தெரியாதது போன்று சென்று விடுவதும் அவரது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, கடந்த காலங்களில் தந்தை பெரியாரை புகழ்ந்து பேசியவர், அப்படியே தான் பேசியதை மறந்து அவரை விமர்சனம் செய்ததும் கடும் சர்ச்சைக்குள்ளானது. இப்படியாக வாரிசு அரசியல் என தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளையும், அதன் முன்னோடிகளையும் விட்டு வைக்காமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவர், தற்போது முதன் முதலாக தனது மனைவியை நாம் தமிழர் கட்சி பொதுக்குழுவில் முன்னிலைப்படுத்தியிருப்பது அனைவரது மத்தியிலும் வேடிக்கையாகி இருக்கிறது. அதாவது, நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல் முறையாக அவரது மனைவி கயல்விழி கலந்து கொண்டார்.

அவருக்கு முன் வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. பின்னர் அவரை தனது அருகே அழைத்து அமர வைத்துக் கொண்டார். முதல்முறையாக அவர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த அளவுக்கு அடுத்தவர்களை விமர்சித்தோம் என்பதை மறந்து தனது மனைவிக்கு பொதுக்குழுவில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது நாம் தமிழர் கட்சியில் வாரிசு அரசியலுக்கு சீமான் முடிச்சு போட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும், தனது மனைவியை கட்சியின் பொதுச் செயலாளராக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வாரிசு அரசியல் என அனைத்து கட்சியினர் மீதும் குற்றம்சாட்டியவர்; நாம் தமிழர் பொதுக்குழுவில் மனைவிக்கு திடீர் முக்கியத்துவம் கொடுத்த சீமான்: கட்சி பொதுச் செயலாளர் ஆக்க திட்டமா? appeared first on Dinakaran.

Tags : Seeman ,Naam Tamilar General Committee ,CHENNAI ,Kayalvizhi ,Dinakaran ,
× RELATED “இசையையும், பாடலையும்...